Tuesday, December 3, 2013

இன்றைய நவீன கண்டுபிடிப்புக்கள்.

1. பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரைவாகவும் பல்திறனுடன் செயற்படக்கூடியது எனவும் பென்சில்வேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு நுணுக்கமாக ஆராயப்பட்டது. ஒவ்வொருவரும் தொழிலில் ஈடுபடும்போது, பயணம் செய்யும்போது, நித்திரையின்போது என பல சந்தர்ப்பங்களில் எவ்வாறு இயங்குகிறார்கள், எதைச் சிந்திக்கிறார்கள் என்பவை கவனத்தில் கொள்ளப்பட்டன.
 
அதனடிப்படையில் பெண்களின் மூளை சிறப்பாக செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக எப்போதோ சந்தித்தவர்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கும்போது மூளையின் இயக்கம் பெண்களுக்கே திறனாக இயங்குவதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
ஆண்கள் ஒரு விடயத்தில் கவனம் எடுத்துச் செயற்படுகையில் மூளை சிறப்பாக இயங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்திறனுடன் செயற்படும் வகையில் பெண்களின் மூளையே இயங்குகிறது.
 
உதாரணமாக நெரிசல் மிக்க நேரத்தில் குறைவான இடவசதியின்போது வாகனமொன்றை பின்னோக்கி செலுத்திவந்து சரியாக நிறுத்துவதற்கு மூளை பல்திறனுடன் செயற்பட வேண்டி ஏற்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பெண்கள் நிதானமாகவும் அதிக கவனத்துடன் செயற்படுவதற்கு மூளையின் இயக்கமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



2.   விரைவில் சந்திரனில் பயிர்ச்செய்கை

 நாஸா நிறுவனம் சந்திரனில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் விண்வெளி சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாக இது அமையுமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

2015 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நாஸா அறிவித்துள்ளது.
 
 
விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள் பலவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாஇ இத்திட்டம் தொடர்பான செயன்முறை கட்டங்களை வடிவமைத்து வருகிறது.
 
அதன் அடிப்படையில் சந்திரனில் விதைக்கப்படும் விதைகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும். பூமியில் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நீர்இகாற்று போன்றவற்றை பெற்றுக்கொடுப்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடைபெறும்.
சந்திரனில் தாவரங்களுக்கான விதை நாட்டப்படும் அதே நேரம் பூமியிலும் விதை நாட்டப்பட்டு இரண்டினதும் வளர்ச்சி வீதம் மற்றும் அவற்றின் உள்ளீர்ப்பு குறித்து ஆராயப்படவுள்ளது.




 


3.  முதல் முறையாக ஆளில்லா விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புகிறது சீனா

 சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற சீனாவின் இலட்சியத் திட்டம் நிறைவேறுகிறது.

 

சாங் இ-3 (கியான் வைபிங் -3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து நாளை திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விண்கல ஏவுதளத் தலைமை அலுவலகக் குழுவினர் தெரிவித்தனர்.
 
சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு அனுப்பிய 2 விண்கலங்களும் சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. தற்போது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை சீனா முதல் முறையாக அனுப்புகிறது.
 
விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஏவுதளமும் அதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சாங் இ-3 விண்கலம் "யுது' என்று அழைக்கப்படும் சந்திரனை ஆராய்ச்சி செய்யும் கருவியையும், அதை தரையில் நிலைநிறுத்தக் கூடிய கருவியையும் தாங்கிச் செல்கிறது. ("யுது' என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களால் சந்திரக் கடவுளாக வணங்கப்பட்டு வரும் வெள்ளை முயலைக் குறிப்பதாகும்.)
 
சந்திரனில் உள்ள இயற்கை வளங்கள், மேற்பரப்பில் உள்ள பொருள்கள், புவியியல் அமைப்பு போன்றவற்றை "யுது' ஆய்வு செய்யும்.
 
விண்வெளி மையத்தில் ரஷியா அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போல, ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை தானும் அமைக்க வேண்டும் என்பதுதான் சீனா தொடர்ந்து விண்கலங்களை சந்திரனுக்கு செலுத்தி வருவதின் பின்னணியாகும்.
 
சந்திரனையும் தாண்டி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் எங்களது விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் செயல்படத் தொடங்குவோம் என்று சாங் இ-3 விண்கலத்தின் தலைமை விஞ்ஞானி யே பெய்ஜியான் தெரிவித்தார்.


4.   50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்

 பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது. 

 Freedom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.
 
கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 



5.  டுவிட்டர் பாவனை: சவுதி முதலிடத்தில்

 

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை பயன்படுத்துவதில் சவுதி அரேபியா முன்னிலையில் உள்ளதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 

இதுகுறித்து "பியர் ரீச்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இணையத்தள வசதி கொண்ட சவுதி மக்களில் 33 சதவீதமானோர் டுவிட்டரை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய கையடக்கத் தொலைபேசியிலேயே டுவிட்டரை பயன்படுத்துகின்றனர்.
 
சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியா இரண்டாம் இடத்திலும் ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
 
வெனிசுலா, ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகள் அடுத்த வரிசையில் இடம்பிடித்துள்ளதுடன் இந்தியா 21 ஆவது இடத்தில் உள்ளது.
       





நன்றி இணையம்






No comments:

Post a Comment